இரவில் அயர்ந்த நித்திரை செய்வதற்கு சில சிறு பிள்ளைகளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. இதற்குப் பல காரணங்கள் இருந்தாலும், ஒருநாள் மாலை நான் அவள் படுக்கை அறையை விட்டு வெளிவந்த பொழுது, என் மகள் அப்படிப்பட்ட காரணம் ஒன்றை என்னிடம் “நான் இருட்டைப் பார்த்து பயப்படுகிறேன்” என்று கூறினாள். அவளுடைய பயத்தைப் போக்க முயற்சி செய்துவிட்டு, விடிவிளக்கை எரியவிட்டு, அந்த வெளிச்சத்தில் பயங்கர ஜந்துக்கள் ஒன்றும் இல்லை என்பதை அவள் அறிந்து கொள்ள விட்டு வந்தேன்.

சில வாரங்கள் கழித்து வியாபார விஷயமாக என் கணவன் இரவில் வேறு இடத்தில் தங்க வேண்டிய சூழ்நிலையில், நான் இரவில் தனித்து தங்க நேர்ந்த பொழுதுதான் என் மகளின் பயத்தைப்பற்றி அதிகமாய் சிந்திக்கலானேன். நான் படுக்கைக்குச் சென்றபின் என்னைச் சூழ இருள் கவ்விக்கொண்டது போல் உணர்ந்தேன். மெல்லிய சத்தம் ஒன்றைக்கேட்டு, அடித்துப் புரண்டு எழுந்திருந்து அந்த சத்தம் எங்கிருந்து வந்தது என்று அறிய முற்பட்டேன். ஆனால் அது ஒன்றுமே இல்லை என்று அறிந்ததினால் இறுதியாக என் மகளின் பயத்தைப்பற்றி என் அனுபவத்தின் மூலம் அறிந்து கொண்டேன்.

இயேசு இப்பூவுலகில் ஓர் மானிடனாய் நாம் அனுபவிக்கும் கஷ்டங்களை அவரும் அநுபவித்ததால் நமது கஷ்டங்களையும் பாரங்களையும் நன்கு அறிவார். “அவர் அசட்டை பண்ணப்பட்டவரும், மனுஷரால் புறக்கணிக்கப்பட்டவரும், துக்கம் நிறைந்தவரும், பாடு அநுபவித்தவருமாயிருந்தார்” (ஏசா. 53:3). நாம் நம் கஷ்டங்களை அவரிடம் கூறும்பொழுது அவர் அவற்றை புறம்பே தள்ளிவிடமாட்டார். நமது உணர்வுகளை மட்டுப்படுத்துவார். அல்லது அதை மனதில் கொள்ளாமல் அகற்றிவிடு என்று கூறி நம் துன்பங்களில் பங்கு கொள்கிறார். அவர் நம் கஷ்டங்களை அறிந்திருக்கிறார் என்பதே, துன்பத்தினால் உண்டாகும் தனிமையை நம்மை விட்டகற்றிவிடும். இருண்ட சமயங்களில் அவரே நமது வெளிச்சமும், இரட்சிப்புமானவர்.